ஹெச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன்..? சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
ஹெச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன்..? சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை திருமயம் பகுதியில், விநாயகர் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறி, நீதித்துறை மற்றும் காவல்துறையை, ஹெச்.ராஜா விமர்சனம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தான் அப்படி பேசவில்லை என ஹெச்.ராஜா மறுத்திருக்கும் நிலையில், உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி குலுவாடி ரமேஷிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த குலுவாடி ரமேஷ், இதுதொடர்பாக மனுவாக தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினார்.
இதையடுத்து, நீதிபதிகள் செல்வம், நிர்மல் குமார் அடங்கிய அமர்வு முன்பு, இதே கோரிக்கையை வழக்கறிஞர்கள் முன்வைத்தனர். இதையடுத்து ஹெச்.ராஜா மீதான புகாரை, தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், 4 வாரத்திற்குள், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என ஹெச். ராஜாவுக்கு உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவில், நீதி பரிபாலனம் செய்வதில் நீதிபதிகள் தான் அச்சாணி என உணர்ந்து, கண்ணியத்தை காப்பது நீதிபதிகளின் தலையாய கடமை என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் தூணான நீதித்துறையை களங்கப்படுத்த முயற்சிப்பதை அனுமதிப்பது என்பது பாஸிசத்தையும், நக்ஸலிசத்தையும் வளர்ப்பதாகவே அமையும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.
எனவே தான், ஹெச். ராஜாவுக்கு எதிராக தானாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்ததாக, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Next Story