தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்புகளை பெருக்க பல்வேறு சலுகைகள் அறிவிப்பு
தகவல் தொழில்நுட்ப துறையில் முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகளை பெருக்க தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலும், புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். 44 பக்கங்கள் கொண்ட அந்த கொள்கை திட்டத்தில் ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
5 கோடி ரூபாய் முதல் 50 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யும் ஐடி நிறுவனங்களுக்கு முதலீட்டு தொகையில் 30 லட்ச ரூபாய் மானியம் மற்றும் 2 ஆண்டு இலவச மின்சாரம் அளிக்கப்படும் எனவும், 50 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு 60 லட்ச ரூபாய் மானியம் மற்றும் 3 ஆண்டுகள் இலவச மின்சாரம் அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், 100 கோடி ரூபாயில் இருந்து 200 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு கோடி ரூபாய் மானியம் 4 ஆண்டு இலவச மின்சாரம்,
200 கோடி முதல் 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஒன்றரை கோடி ரூபாய் மானியம், 5 ஆண்டு இலவச மின்சாரம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நிறுவனங்கள் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 50 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்கள் 500 பேருக்கும், 100 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யும் நிறுவனங்கள் ஆயிரம் பேருக்கும், 200 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யும் நிறுவனங்கள் 2 ஆயிரம் பேருக்கும், 500 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்கள் 4 ஆயிரம் பேருக்கும் கண்டிப்பாக வேலை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் அதிக முதலீடுகளையும் நிறுவனங்களையும் ஈர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story