நிலம் கையகப்படுத்தும் சட்டம் செல்லும் - உயர்நீதிமன்றம்
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டப்பிரிவு செல்லும் என, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டில், நிலம் கையகப்படுத்துதல் சட்டம், மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இதில் நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு சட்டத்தின் 105வது பிரிவின்படி நெடுஞ்சாலை போன்ற அவசர தேவைகளுக்கான திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் போது, சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளாமல், நிலத்தை கையகப்படுத்தும் வகையில் தேசிய நெடுஞ்சாலை சட்டம் உள்ளிட்ட 13 சட்டங்களுக்கு புதிய சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டது. இந்தப் பிரிவை ரத்து செய்யக்கோரியும், அதன் அடிப்படையில் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரியும் 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நிலம் கையகப்படுத்தும் சட்டப் பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது அல்ல எனவும் இந்தப் சட்ப்பிரிவுகள் செல்லும் எனவும், மேலும், 8 வழிச் சாலையை எதிர்த்து ஏற்கனவே தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மனுதாரர் எழுப்பிய கோரிக்கைகள் உகந்தது அல்ல என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
Next Story