கொள்ளையர்களை பிடிக்க பிரெட் ஆம்லெட் மாஸ்டரான போலீஸ்
சென்னையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்களை நூதன முறையில் மாறுவேடமிட்டு போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையின் பிரதான பகுதிகளான அபிராமபுரம், கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் இரவு நேரங்களில் அடிக்கடி கொள்ளை சம்பவம் நடந்து வந்துள்ளது.
இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து அதிகளவில் புகார் வந்ததால் அபிராமபுரம் உதவி ஆணையர் சுதர்சன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அப்போது கொள்ளை நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது ஒரு காரின் பக்கவாட்டு பகுதி மட்டுமே கிடைத்துள்ளது.
இதை வைத்து அதே மாதிரியான கார்களை தேடி அலைந்த போலீசார் அதில் 80 கார்களை பட்டியலிட்டு விசாரணையை தொடங்கினர்.
அப்போது அந்த காரை இணையதளத்தின் மூலம் வாங்கி கொள்ளையர்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. தொடர்ந்து அந்த காரின் முன்னாள் உரிமையாளரிடம் விசாரணை நடத்திய போலீசாருக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன.
அதனை அடிப்படையாக கொண்டு குற்றவாளியை போலீசார் நெருங்கினர். ஆனால் குற்றவாளியை கைது செய்ய போலீசார் நூதன திட்டம் ஒன்றை வகுத்தனர்.
குற்றவாளியின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் செல்போன் டவர் இருப்பது தெரியவந்தது.
அப்போது அந்த பகுதிக்கு சென்ற தனிப்படை போலீசார் சாலை போட வந்தவர்கள் போல வேடமிட்டு மாரிமுத்து என்ற கொள்ளையனை அதிரடியாக கைது செய்தனர்.
மாரிமுத்துவிடம் நடத்திய விசாரணையில் அவரது கூட்டாளிகளான சிவா மற்றும் ராஜேஷ் ஆகியோர் சைதாப்பேட்டையில் உள்ள கடை ஒன்றில் கூடி திட்டம் போடுவது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், அந்த கடையில் பிரெட் ஆம்லெட் போடும் மாஸ்டர் போல வேடமிட்டு நோட்டமிட்டு வந்தனர்.
அப்போது அங்கு வந்த இரு கொள்ளையர்களையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் நகைகளை விற்பனை செய்ய உதவியாக இருந்த நாகூர் மீரான் என்பவரையும் கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2 கிலோ வெள்ளி, 56 சவரன் தங்க நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
கொள்ளையர்கள் 4 பேரை பிடிக்க பல கெட்டப்புகளில் போலீசார் தீவிரமாக செயல்பட்டுள்ளனர். அவர்களுக்கு காவல்துறை உயரதிகாரிகள் தரப்பில் இருந்து பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
Next Story