தமிழக அரசியலில் உதயமாகிறதா புதிய கூட்டணி?
அண்மைக்கால தமிழக அரசியல் நிகழ்வுகள், புதிய கூட்டணி சமன்பாடுகள் உருவாகின்றனவோ என்ற எண்ணத்தை அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் மரணம் மாநில அளவில் சில மாற்றங்களை உருவாக்கி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர் ஜெயலலிதா மறைவின் போது திமுக பொதுக் குழுவில் அவருக்கு , இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சமீப காலமாக, தமிழகத்தில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கருத்து மோதல் உச்சத்தில் இருந்தது. கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம்,தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் திமுக தொண்டர்கள் சிலரால் தாக்கப்பட்டது. ஆனால் தற்போது, அந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளனர்.இதற்கிடையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டங்கள் சென்னையில் வருகிற 30ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தேசிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. திமுகவுடன் தோழமையாக உள்ள தேசிய கட்சிகளின் தலைவர்கள் அதில் பங்கேற்பார்கள் என்று கருதி வந்த நிலையில் எதிர்பாராத திருப்பமாக அந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்டாலின் விடுத்த அழைப்பை, நேரில் சென்று தெரிவித்த முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலுவிடம், அமித்ஷா, தனது சென்னை வருகையை உறுதி செய்துள்ளார். காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருப்பதால், அவருக்கு பதில் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் எதிரும் புதிருமாக இருக்கும் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்பது தமிழகத்தில் துளிர்த்துள்ள மாற்று அரசியல் , தேசியத்தை நோக்கியும் திரும்பியுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது... இதனிடையே, அதிமுக செயற்குழுவில் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், டெல்லியில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம், தனக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல, அதிமுகவுக்கு ஏற்பட்ட அவமானமாகவே பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.இதனால் அதிமுக ஆதரவு என்ற நிலைப்பாட்டை கைவிட்டு, திமுகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை பாஜக கையில் எடுக்கத் தொடங்கி உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் , தமிழக அரசியலில் ஏற்பட்டு வரும் இந்த அரசியல் திருப்பங்கள் அணி மாற்றத்திற்கு வித்திட வாய்ப்புள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
Next Story