உதவி பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - போலீஸார் தீவிர விசாரணை...
திருவண்ணாமலை அருகே அரசு வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர், 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி படித்து வரும் தனக்கு, விடுதி காப்பாளர் மற்றும் பெண் உதவி பேராசிரியர்கள் இருவரும் பாலியல் தொந்தரவு செய்ததாக அவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த மாணவி மற்றும் அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், வாணாபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
"மாணவி புகார் குறித்து ஆட்சியர் விசாரணை, பாலியல் புகாருக்கு கல்லூரி நிர்வாகம் மறுப்பு"
மாணவி அளித்த புகார் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தீவிர விசாணை நடத்தி வருகிறார். இதற்கிடையே, மாணவி தெரிவித்த பாலியல் புகாரை கல்லூரி நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், கல்லூரி விடுதியில் தங்கி படித்த அந்த மாணவி தவறு செய்ததால் விடுதியில் இருந்து வெளியே செல்ல உத்தரவிட்டதாகவும், அவரது குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்றும் தெரிவித்தார்.
"வேளாண் கல்லூரியில் மாவட்ட நீதிபதி ஆய்வு"
மாணவியின் புகாரை அடுத்து திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தி வேளாண் கல்லூரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அங்கு பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்களிடம் அவர் விசாரணை மேற்கொண்டார்.
Next Story