ஆண்டு முழுவதும் தீபம் எரியும் ஆகாய மாரியம்மன் கோயில்
வளையல் வியாபாரியின் வேண்டுகோளை ஏற்று ஆகாயமார்க்கமாக வந்த சமயபுரம் மாரியம்மன் குறித்த விவரங்களைச் சொல்கிறது இத்தொகுப்பு.
கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது நாச்சியார்கோவில். இங்கு ஆகாச மாரியம்மனாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள் அம்பிகை.வளையல் வியாபாரி ஒருவர் வருடந்தோறும் திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க செல்வது வழக்கம். ஆனால் சூழல் காரணமாக ஒரு முறை போக முடியாத காரணத்தால் அம்பாளை மனமுருக வேண்டினார் அந்த வியாபாரி. அப்போது அந்த வணிகரின் பக்தியை மெச்சி ஆகாய மார்க்கமாக வந்த சமயபுரம் மாரியம்மன் அவருக்கு அருள் கொடுத்ததாக கூறப்படுகிறது... வைகாசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் வெள்ளிக் கிழமையன்று அம்பாள் காட்சி கொடுத்ததால் இன்றும் அம்மனே ஆகாய மார்க்கமாக வருவதாக பக்தர்களிடையே நம்பிக்கை நிலவுகிறது...
இந்த கோயிலில் அம்பாளுக்கு சிற்பமோ, விக்ரகமோ எதுவும் கிடையாது. அம்பாள் வான் வழியாக வந்து காட்சி கொடுத்த காரணத்தால் கோயிலில் அகல் விளக்கு மட்டுமே எரிகிறது. வருடத்தின் எல்லா நாட்களும் ஜோதி வடிவில் காட்சி தரும் அம்மனை பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.வைகாசி மாதம் 10 நாட்கள் நடக்கும் திருவிழாவின் போது தர்ப்பையால் அம்பாளின் தோற்றத்தை உருவாக்கி விதவிதமாக அலங்கரித்து வழிபாடுகளை நடத்துகின்றனர். இந்த பத்து நாட்களிலும் சரஸ்வதியாக, பார்வதியாக, லெட்சுமியாக, மகிஷாசுரமர்த்தினி என ஒவ்வொரு அலங்காரத்திலும் மாரியம்மன் கண் கொள்ளா காட்சியில் பக்தர்களுக்கு அருள் தருகிறாள். அம்மை நோயை நீக்கியவள் அம்பாள் என்பதால் இந்த தலத்திற்கு வந்தால் அம்மை நோய் நெருங்காது என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. அதேபோல் திருவிழா நாட்களின் போது அங்க பிரதட்சணம் செய்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் எனபது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.பெண்கள் மாவிளக்கு போட்டும்,பூக்களால் அம்பிகையை அர்ச்சனை செய்தும் வழிபடுகின்றனர்.உருவம் இல்லாமல் பக்தர்களின் உணர்வுகளை புரிந்து வேண்டுதலை நிறைவேற்றும் ஆகாச மாரியம்மனின் கோயில் அற்புதங்கள் நிறைந்ததாகவே காணப்படுகிறது.
Next Story