கோவில்களில் ஆன்லைன் பதிவு முறையில் 500 கோடி ரூபாய் முறைகேடு?
தமிழக கோவில்களில் பூஜை செய்வதற்கு ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை மூலம், 500 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் நான்காயிரம் கோவில்களில், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி, தரிசனம், பூஜை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு பதிவு செய்யும் வழக்கம் கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.இதற்காக சுமார் 10 தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்தது. இந்நிலையில்,ஆன்லைன் பதிவு முறை மூலம், சுமார் 500 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.ஆன்லைன் மூலம் வசூலாகும் பணம், அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக, தனியார் நிறுவனங்கள் மூலம் கிடைக்கப்பெற வேண்டிய கோடிக்கணக்கான பணம் செலுத்தப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.இந்த முறைகேட்டில், அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
"ஆன்லைனில் பெறப்படும் காணிக்கைகளில் முறைகேடு" - பழனி கோவில் நிர்வாகிகள் புகார்
பழனி முருகன் கோவிலின் இணையப் பக்கத்தை நிர்வகித்து வந்த ஸ்கை என்ற நிறுவனம், ஆன்லைனில் வசூலாகும் காணிக்கை உள்ளிட்டவற்றை, கடந்த சில ஆண்டுகளாக கோவில் நிர்வாகத்திடம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது பழனி கோவிலின் இணையதளப் பக்கம் கடந்த பத்து மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் கோவில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதேபோல, ஸ்கை நிறுவனத்தால், நிர்வகிக்கப்படும் திருச்செந்தூர், ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோவில்களின் இணையதள பக்கங்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Next Story