சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான வழக்கு :சட்டப்படியே நிலம் கையகப்படுத்தப்படுகிறது - மத்திய அரசு
சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு சுற்றுச் சூழல் துறை ஒப்புதல் பெறாமல் எந்த பணியும் மேற்கொள்ள முடியாது என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, பாமக எம்.பி.அன்பு மணி உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்புராயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தற்போதைய திட்டப்படி சாலை அமைக்கும் பகுதியில் 80 சதவீத விவசாய நிலங்களும், 10 சதவீத வனப்பகுதியும் வருகின்றன என சுட்டி காட்டினர்.
மேலும் நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையின் படி 5 மாவட்டங்களில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட வில்லை எனவும் குற்றம் சாட்டினர்.மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல் பெறும் முன்பே நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியது,உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது என்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.இதையடுத்து, மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பசுமை வழிச்சாலைத் திட்டத்திற்கு, சட்டப்படியே நிலம் கையகப்படுத்தப்படுவதாக கூறினார்.
இந்த திட்டத்திற்கு இன்னும் சுற்று சூழல் துறையின் ஒப்புதல் பெறவில்லை என குறிப்பிட்டார். நில அளவீட்டு பணிகளை மேற்கொள்ளாமல் சுற்றுச் சூழல் ஒப்புதல் பெற முடியாது எனவும் அவர் கூறினார். அனைத்து விதிகளையும் அரசு மீறும் என்ற யூகத்தில் வழக்கு தொடர முடியாது என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் கூறினார்.பசுமை வழிச்சாலை திட்டம் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்ததை தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
Next Story