ரூ.2 லட்சம் வைப்புத் தொகை விவகாரம் - தனியார் பள்ளி நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது
10 ஆயிரம் மாணவ, மாணவிகளை தலா 2 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை கட்டச் சொன்ன தனியார் பள்ளி நிர்வாகி மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட 4 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
சென்னை குரோம்பேட்டை மற்றும் ஆலப்பாக்கத்தில் தனியார் பள்ளியில் படிக்கும் 10 ஆயிரம் மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு, தலா 2 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை செலுத்தக்கோரி பள்ளி நிர்வாகம் கடிதம் அனுப்பி இருந்தது. வரும் 31 ஆம் தேதிக்குள் பணம் கட்ட முடியாதவர்களுக்கு அடுத்த ஆண்டு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் என அதில் இடம் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பெற்றோரை பள்ளி நிர்வாகி சந்தானம் உள்ளிட்டோர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் நடந்த காலை கூட்டத்தில், பள்ளி நிர்வாகி சந்தானம் பெற்றோரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெற்றோர், புனித தாமஸ் மலை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில், துணை பீர்க்கன்கரணை போலீஸ் நிலையத்தில் வைத்து பள்ளி நிர்வாகி சந்தானத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் பல்வேறு பிரிவுகளின் கீழ் பள்ளி நிர்வாகி சந்தானம் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Next Story