திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலை தனியார் அமைப்பிடம் ஒப்படைக்கலாமா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
ஒரு புனிதரின் சமாதியை அரசு நிர்வகிக்க முடியாது என்று மனுதாரர் தரப்பிலும்,பராமரிக்கும் அதிகாரம் அரசிற்கு உள்ளது என்று அரசு தரப்பிலும் வாதம்
* சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி சமாதியை தனியார் அமைப்பிடம் ஒப்படைக்கலாமா? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
* முருகப் பெருமான் குறித்து 6 ஆயிரத்து 666 பாடல்களை பாடியுள்ள ஸ்ரீ பாம்பன் குமரகுரு தாசர் கடந்த 1929-ம் ஆண்டு மே 30-ந்தேதி மரணம் அடைந்தார். இவரது சமாதியுடன்
கூடிய கோயில் சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ளது.
* 1984-ம் ஆண்டு, இந்த சமாதியை, மகா தேஜோ மண்டல சபாவின் அப்போதைய செயலாளர், யாரிடமும் கலந்து பேசாமல் இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைத்தார்.
* இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் சபாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த போதும், இந்து சமய அறநிலையத்துறை, நிர்வாக பொறுப்பில் இருந்து விலகாததால், பாம்பன் சுவாமி சமாதியை தங்களிடம் ஒப்படைக்க கோரி மகா தேஜோ மண்டல சபா செயலாளர் எம்.ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
* இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி, ஒரு புனிதரின் சமாதியை நிர்வகிக்க முடியாது. கோவில்களை மட்டும் தான் நிர்வகிக்க முடியும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
* இதையடுத்து, பாம்பன் சுவாமி சமாதியை மனுதாரரின் அமைப்பிடம் ஒப்படைத்தால் என்ன?' என்று இந்து சமய அறநிலையத்துறையிடம் நீதிபதி டி.ராஜா கேள்வி எழுப்பினார்.
* இதற்கு பதில் அளித்த தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞர், கோவில் மட்டுமல்லாமல், கோவிலுடன் கூடிய புனிதர்களின் சமாதியையும் பராமரிக்கும் அதிகாரம் இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்ளது என்றார்.
* இதற்காக கடந்த 2012-ம் ஆண்டு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும், இந்த சமாதி அமைந்துள்ள சொத்து பல நூறு கோடி ரூபாய் மதிப்புடையது எனவும் வாதிட்டார்.
* இதையடுத்து வழக்கு விசாரணை இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.
Next Story