லாரிகள் வேலைநிறுத்தம் - ஆங்காங்கே நிறுத்தப்பட்ட சரக்கு லாரிகள்
அகில இந்திய லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நாமக்கல் பகுதியில் நூறு சதவீதம் சரக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
நாமக்கல் அருகே உள்ள கீரம்பூர் சுங்கச் சாவடியில், நூற்றுக்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்கள், சரக்கு வாகனங்கள் போக்குவரத்தை கண்காணித்து வருகின்றனர். நாள்தோறும் 9 முதல் 10 ஆயிரம் சரக்கு வாகனங்கள், சுங்கச் சாவடியை கடப்பதன் மூலம், தினம்தோறும் சராசரியாக 9 லட்சம் ரூபாய் வரை சுங்கக் கட்டணம் வசூல் ஆன நிலையில், நேற்று 3 லட்சத்துக்கும் குறைவாகவே வசூலாகி உள்ளதாக கூறப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்கள், கனரக இயந்திரங்கள், காற்றாலை, ஜே.சி.பி. , பெரிய டிரான்ஸ்பார்மர்கள் ஏற்றி வந்த வாகனங்கள் சுங்கச் சாவடி அருகே ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து வடமாநில வாகன ஓட்டுநர்கள் கூடாரம் அமைத்து உணவு சமைத்து சாப்பிட்டு, அங்கேயே முகாமிட்டுள்ளனர். போதிய உணவுப் பொருட்கள் கிடைக்காமலும், தண்ணீர் இன்றியும் தவித்து வருவதாகவும் லாரி ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவில் இருந்து வந்த ரேஷன் அரிசியை லாரிகளில் ஏற்ற எதிர்ப்பு
இதனிடையே, ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் நாமக்கல் கொண்டு வரப்பட்ட
2 ஆயிரத்து 500 டன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு லாரி மூலம் ஏற்றிச் செல்ல, லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாமக்கல் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீஸார் குவிக்கப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு அரிசி மூட்டைகளை லாரிகளில் ஏற்றும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், தொப்பூர் சுங்கச் சாவடியில் செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி, சண்முகப்பா, சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்றார்.
Next Story