கோடி நன்மைகள் தரும் சேலம் கோட்டை மாரியம்மன்
அம்மன் கோயில்களில் பிரசித்தி பெற்ற சேலம் கோட்டை மாரியம்மன் குறித்த செய்தித் தொகுப்பு..
சேலம் என்றாலே மாம்பழம் என்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், பக்தர்களின் மனதில் நம்பிக்கையை விதைத்து இருக்கும் கோட்டை மாரியம்மன் பெயரை சொல்பவர்களும் அதிகம் உண்டு. பழைய பேருந்து நிலையம் அருகே ஓங்கி உயர்ந்து காட்சி தரும் அந்த கோபுரமே அம்மன் உறையும் அந்த இடத்துக்கான அடையாளம். சேலம் மாவட்டத்தை காக்கும் காவல் தெய்வமாக 500 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களின் நம்பிக்கையை பெற்று காட்சி தருகிறாள் இந்த அன்னை. சந்திர கிரகணம், சூரிய கிரகணம் போன்ற காலங்களில் கூட கோயில் நடை சாத்தப்படுவதில்லை. நவகிரகங்களுக்கும் நாயகி என்பதால் இந்த கோவிலில் கிரகண காலங்களின் போது சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது என்பது கூடுதல் சிறப்பு.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடின்றி அனைவரும் தலையை குனிந்து வழிபட வேண்டும் என்பதற்காகவே மிகவும் குறுகலான கருவறை அமைக்கப்பட்டுள்ளது.கருவறைக்குள் சாந்த சொரூபியாக காட்சியளிக்கும் அம்மனை காண கண்கள் கோடி வேண்டும்.தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற எலுமிச்சம் பழ விளக்கும், நெய் விளக்கும் ஏற்றி பக்தர்கள் வழிபாடு நடத்துகிறார்கள்.
கோயிலின் கருவறைக்குள் அம்மன் அக்னி திசையை நோக்கி அதுவும் வலது காலை ஊன்றி இடது காலை மடக்கி வீர ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். என்ன வேண்டுதல்கள் வைத்தாலும் அம்மன் அதை நிறைவேற்றி தருகிறார் என்பதே இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.சேலம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வரும் பக்தர்களே அதற்கு சாட்சி. ஆடி மாதத்தில் இங்கு நடத்தப்படும் விழா பார்ப்போரை ஆச்சரியப்பட வைக்கும். ஆடிப் பெருக்கு நிகழ்வுக்கு பிறகு வரும் 22 நாளும் இங்கு விழாக்கோலம் தான்.ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரம், உற்சவம் என அம்மன் கண் கொள்ளா, காட்சியளிப்பாள். காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கோயிலின் நடை திறந்திருக்கும்.
Next Story