ஆசிரியர்களின் இடைவிடாத பேச்சால் உயிர் பிழைத்த மாணவன்...
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் உயிர் பிரியும் தருணத்தில் இருந்த மாணவன், ஆசிரியர்களின் பேச்சால் உயிர் பிழைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோமாவில் இருந்த சிறுவன் உயிர் பிழைத்த அதிசயம்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவன், அருண் பாண்டியன். இவர் பள்ளிக்கு பேருந்தில் சென்ற போது, திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள், அருண் பாண்டியனை தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள், நாடித்துடிப்பு குறைவாக உள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில், பள்ளி ஆசிரியர்கள் மணிகண்டன், சோமு ஆகியோர் மாணவன் அருண் பாண்டியனின் காதருகே சென்று இடைவிடாமல் பேச்சு கொடுத்தனர். ஆசிரியர்களின் பேச்சை கேட்டதும், அருண் பாண்டியனின் நாடித்துடிப்பு வேகமானது.
மாணவன் அருண் பாண்டியனின் நாடித்துடிப்பு அதிகமானதும், மகிழ்ச்சியடைந்த ஆசிரியர்கள், தொடர்ந்து மாணவன் அருகில் நின்றபடி பேசிக் கொண்டே இருந்தனர். ஆசிரியர்களின் இந்த முயற்சியால், மாணவன் அருண்பாண்டியனுக்கு 7 நிமிடங்களுக்கு பிறகு, சுயநினைவு திரும்பியது. இதனால் மருத்துவமனையில் இருந்த மாணவனின் பெற்றோர் உட்பட அனைவரும் மகிழ்ந்தனர். மகனின் உயிரை காப்பாற்றியதற்கு அருண் பாண்டியனின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர். சாவின் விளிம்புக்கு சென்ற மாணவரை, ஆசிரியர்கள் காப்பாற்றிய சம்பவம் பல்வேறு தரப்பினரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Next Story