விநாயகர் சதுர்த்தி - சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி சிலைகள் தயாரிக்கும் பணி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்ப்போம்.
விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி பூஜைக்காக, சிலைகள், தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தின், செல்வபுரம்,சுண்டக்காமுத்தூர் தெலுங்குபாளையம், ஈச்சனாரி போன்ற பல இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு பாகுபலி 2 படத்தில் வரும் விநாயகர் சிலை, யானையின் மீது அமர்ந்த விநாயகர் சிலை, ஆஞ்சநேயர் மீது அமர்ந்த விநாயகர் சிலை ஜல்லிக்கட்டு விநாயகர் என புது வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்த ஆண்டு விநாயகர் சிலைகளின் விலை, 30 சதவீதம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் சிலை தயாரிப்பில் ஈடுபட்டிருப்பவர்கள்.... ஜிஎஸ்டி வரி விதிப்பை இதற்கு காரணமாக சொல்கிறார்கள்.
விநாயகர் சிலை தயாரிப்பில், தற்போது 90 சதவிகித பணிகள் மட்டுமே முடிவடைந்ததாகவும், இங்கு தயாரிக்கப்படும் சிலைகள், கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி, ஊட்டி போன்ற பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
Next Story