"பழனி கோவில் நவபாஷாண சிலை பாதுகாப்பாக உள்ளது" - உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை விளக்கம்
பழனி தண்டாயுதபாணி கோவிலில் உள்ள நவபாஷாண சிலை பாதுகாப்பாக உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பழனி தண்டாயுதபாணி கோவிலில் உள்ள நவபாஷாண சிலை, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் போகர் சித்தரால் உருவாக்கப்பட்டது. மருத்துவ குணம் கொண்ட இந்த சிலை சேதம் அடைவதை தடுக்க பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை செய்ததில், முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்ததாகவும், சில தனிப்பட்ட நபர்களின் விருப்பத்திற்காக, நவபாஷண சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பழனியை சேர்ந்த சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சிலையை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கவும் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கு நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்தபோது, பழனி மூலவர் சிலையான நவபாஷாண சிலை பாதுகாப்பாக உள்ளதாகவும், அதை மாற்றுவதற்கான திட்டம் ஏதுமில்லை என்றும் இந்து சமய அறநிலைய துறை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
Next Story