ரூ.50,000 பணத்தை ஒப்படைத்த மாணவனின் கல்வி செலவை ஏற்கிறார் ரஜினி
சாலையில் கிடந்த 50 ஆயிரம் பணத்தை ஆசிரியையிடம் ஒப்படைத்த மாணவனை வரவழைத்து, தங்கக் சங்கிலி பரிசளித்து நடிகர் ரஜினி வாழ்த்தினார்.
ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர் குளம் பகுதியைச் சேர்ந்த பாட்ஷா- அப்ருத் பேகம் தம்பதியின் 2வது மகன் முகமது யாஷின். சின்னசேமூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.
பள்ளி அருகே சாலையில் கிடந்த 50 ஆயிரம் பணத்தை எடுத்த முகமது யாஷின், ஆசிரியையிடம் ஒப்படைத்தான். மாணவனின் நேர்மையை பாராட்டிய ஆசிரியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனிடம் பணத்தை ஒப்படைத்தார்.
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இந்நிலையில், தந்தி டிவிக்கு பேட்டியளித்த அந்த மாணவன், நடிகர் ரஜினியை சந்தித்து ஆசி பெற வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தான்.
இதையறிந்த ரஜினி, போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்திற்கு மாணவனை வரவழைத்து, வாழ்த்து தெரிவித்தார். மேலும், மாணவனுக்கு தங்கச்சங்கிலியும் பரிசாக அணிவித்து, ரஜினி பாராட்டினார்.
இந்நிலையில், நடிகர் ரஜினியை சந்திக்க வந்த மாணவன் முகமது யாஷினின் குடும்பத்தினர், மிகவும் சந்தோஷமாக காணப்பட்டனர். தனது மகனின் குணத்தையும், செயலையும் அனைவரும் பாராட்டுவது தங்களுக்கு பெருமையாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தனியார் பள்ளியில் மாணவனை படிக்க வைப்பதாக லதா ரஜினிகாந்த் கூறியதை ஏற்க மறுத்த யாஷினின் தாய், அரசு பள்ளியிலேயே மாணவனை தொடர்ந்து படிக்க வைப்பதாக கூறியுள்ளார்.
Next Story