இடியாப்ப சிக்கலாக மாறிய மருத்துவ படிப்பு சேர்க்கை...மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டியது என்ன?

3 ஆயிரம் எம்பிபிஸ் இடங்களும், குறைந்த எண்ணிக்கையில் பி.டி.எஸ்., இடங்களும் நிரம்பின
இடியாப்ப சிக்கலாக மாறிய மருத்துவ படிப்பு சேர்க்கை...மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டியது என்ன?
x
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், கடந்த 1 ம் தேதி முதல், 7 ம் தேதி வரை, சென்னையில் நடந்த முதல்கட்ட மருத்துவ படிப்பு சேர்க்கை கலந்தாய்வில், 3 ஆயிரம் எம்பிபிஸ் இடங்களும், குறைந்த எண்ணிக்கையில் பி.டி.எஸ்., இடங்களும் நிரம்பின.மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்த மாணவர்கள், மருத்துவர் கனவில் மிதந்த நிலையில், கடந்த 10 ம் தேதி, உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த  அதிரடி உத்தரவு, அவர்களின் கனவை தவிடு பொடியாக்கி இருக்கிறது!தமிழ்வழியில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு, கேள்வி மற்றும் பதில்கள் தவறாக தரப்பட்டதால், 49 கேள்விகளுக்குரிய 196 மதிப்பெண்களை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததோடு, புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டு, மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.இந்த உத்தரவு வந்து ஐந்து நாட்கள் ஆன நிலையிலும், மத்திய, மாநில அரசுகள் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்வை நடத்திய சி.பி.எஸ்.இ., அமைப்பு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.  இது குறித்து சி.பி.எஸ்.இ., எந்த கருத்தையும் வெளியிடவில்லை.ஒன்று, உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்க வேண்டும்; இல்லை எனில், மேல் முறையீடு செய்ய வேண்டும். இரண்டையும் செய்யாமல் சிபிஎஸ்இ அமைதி காப்பதும், தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதும், மருத்துவ படிப்பில் சேர்ந்த 3 ஆயிரத்து 500 மாணவர்களை சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது.சிபிஎஸ்இ அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காத்திருக்காமல், தமிழக அரசே, உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.நீட் தேர்வுக்கான மையங்களை அமைப்பது தொடர்பான வழக்கில் வேகம் காட்டி, உத்தரவை பெற்ற சிபிஎஸ்இ, தற்போதைய தீர்ப்பிற்குப் பின் அமைதி காட்டுவது ஏன் என்பதும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்பதும்,  பெற்றோர்-மாணவர் நலச்சங்கம் மற்றும் சட்ட நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று, சிபிஎஸ்இ நடவடிக்கை எடுத்தால், ஏற்கனவே சேர்க்கை உத்தரவு பெற்ற மாணவர்களும், மேல் முறையீட்டிற்குச் சென்று வேறு உத்தரவு வந்தால், அதை எதிர்த்து, தமிழ்வழியில் தேர்வெழுதிய மாணவர்களும் நீதிமன்றத்திற்கு செல்வார்கள் என்பதால், மருத்துவ படிப்பு சேர்க்கை இடியாப்ப சிக்கலாக மாறியிருக்கிறது!


Next Story

மேலும் செய்திகள்