பசுமை வழிச்சாலை : நிலம் அளவீடு செய்யாமல் ஆய்வு மேற்கொள்ள முடியாது - திட்ட இயக்குநர் பதில் மனு

நில அளவை பணிகளை முடிக்காமல் திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய முடியாது என பசுமை வழிச்சாலை திட்ட இயக்குநர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்...
பசுமை வழிச்சாலை : நிலம் அளவீடு செய்யாமல் ஆய்வு மேற்கொள்ள முடியாது - திட்ட இயக்குநர் பதில் மனு
x
பசுமை வழிச்சாலை - திட்ட இயக்குனர் பதில் மனு

சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ளாமல் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க கோரி தர்மபுரியை சேர்ந்த நில உரிமையாளர்  கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பசுமை வழிச்சாலை திட்ட இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில்,  சென்னையில் இருந்து மேற்கு மாவட்டங்கள் செல்லும்  இரண்டு  சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தடுக்கவே பசுமை வழிச் சாலை திட்டம் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு  700 கோடி ரூபாய் அளவிற்கு எரிபொருள் செலவு மிச்சப்படுத்தப்படும் எனவும், சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு வழித்தடத்தை மாற்றுவதற்கு மறு ஆய்வு செய்ய வேண்டும், கல்வராயன் மலை வனப் பகுதியை தவிர்க்க செங்கிராம் முதல் சேலம் வரை சாலை மாற்றியமைப்பது  உள்ளிட்ட நிபந்தனைகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

277 கிலோ மீட்டர் சென்னை - சேலம் சாலை பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பை விரிவாக ஆய்வு செய்ய ஜார்கண்ட் மாநில தன்பத் ஐஐடி உதவி பேராசிரியரை கேட்டுக் கொண்டுள்ளோம். அவரும் இதனை ஏற்றுக் கொண்டார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், நில அளவை பணிகளை முடிக்காமல் திட்டத்தின் சாத்திய கூறுகள், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள முடியாது என்பதாலேயே தற்போது அந்த பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் பதில் மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்