நிர்மலா தேவி விவகாரம் - குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேருக்கும் ஜாமின் தர முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், கல்லூரி மாணவிகள் சம்பந்தப்பட்டிருப்பதால், குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேருக்கும், வழக்கு முடியும் வரை ஜாமின் தர முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
நிர்மலா தேவி விவகாரம் - 3 பேருக்கும் ஜாமின் தர முடியாது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து வந்த பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான முறையில் வழி நடத்தியதாக சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக நிர்மலா தேவி, முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கருப்பசாமி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சாமிநாதன், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம், இந்திய கலாச்சாரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் பங்கம் விளைவிக்கும் வகையிலான பிரச்சினை என்பதால், குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களை வழக்கு முடியும் வரை வெளியே விட முடியாது என தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக ஜூலை 16-ஆம் தேதியில் சிபிசிஐடி போலீசார் தங்களது முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், செப்டம்பர் பத்தாம் தேதியன்று கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் செப்டம்பர் மாதம் 24 தேதியன்று, விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தனது விசாரணையை தொடங்க வேண்டும் எனவும், 6 மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story