சர்வதேச ரேஸ் பைக் பந்தயத்தில் திருச்சி மாணவர்கள் தயாரித்து வரும் சூப்பர் பைக்
ஸ்பெயின் நாட்டில் நடைபெற இருக்கும் சர்வதேச ரேஸ் பைக் பந்தயத்தில், திருச்சி மாணவர்கள் தயாரித்து வரும் சூப்பர் பைக் கலந்து கொள்கிறது.
திருச்சி மாணவர்கள் தயாரித்து வரும் சூப்பர் பைக்
ஸ்பெயின் நாட்டில் உள்ள அல்கானிஸ் நகரில், "மோட்டோ ஸ்டூடன்ஸ்" சர்வதேச போட்டி, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் தயாரிக்கும் பைக்குகள் போட்டியிடுவது வழக்கம். 17 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ள இந்த சர்வதேச பந்தயத்திற்காக, திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ரேஸ் பைக் தயாரித்து வருகிறார்கள். மெக்கானிக்கல் துறையை சேர்ந்த வருண்ராஜன், சூர்யா, சண்முகநாதன், ராஜேந்திரன், குமரேசன், எலக்ட்ரிகல் கம்யூனிகேசன் துறையை சேர்ந்த வைஷ்ணவி, சுசாந்தி சுகி மற்றும் எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ் துறையை சேர்ந்த பேரின்பராஜ், ரிஜோய் ஆகிய 9 பேர் இணைந்து இந்த பைக்கை உருவாக்கி வருகின்றனர்.
பெட்ரோல் மோட்டார் பைக் பிரிவில் பங்கேற்க உள்ள இந்த பைக்கில் 4 எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது, பைக்கை வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள மாணவ மாணவியர், ஆகஸ்டு மாத இறுதியில் பணிகள் அனைத்தும் நிறைவடையும் என எதிர்பார்க்கின்றனர். உலகத்தரம் வாய்ந்த போட்டியில் பங்கேற்க உள்ள இந்த பைக்கை உருவாக்க ஏறத்தாழ 35 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. சில உதிரி பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதால், பொருளாதார நெருக்கடியால் சில தொய்வுகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர். தற்போது 20 லட்சம் ரூபாய் வரை செலவழித்துள்ள மாணவர்கள், மேலும் தேவைப்படும் 15 லட்சம் ரூபாய்க்கு யாராது உதவினால் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
Next Story