ஆசிரியர் - மாணவர் உறவு : இட மாறுதலை ஏற்றுக் கொள்ளாத மாணவர்கள்
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாறுதல் நடைபெற்றாலே அந்த ஊரில் நெகிழ்ச்சி சம்பவங்கள் அரங்கேறத் துவங்கி விடுகின்றன.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றாலே, நேரத்திற்கு வர மாட்டார்கள், பாடம் நடத்த மாட்டார்கள், ஆசிரியர்களை மாணவர்கள் மதிக்க மாட்டார்கள் என்ற நிலை மாறி வருகிறது.
பிடித்த ஆசிரியருக்கு மாறுதல் வந்தால் மாணவர்கள் காட்டும் நெகிழ்ச்சி அசர வைக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம், வெளியகரம் அரசுப் பள்ளியில், ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய பகவான், பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரை விடை பெற விடாமல் மாணவர்கள் கண்ணீர் விட்டு கட்டி அணைத்தனர்,.
அரக்கோணத்தை அடுத்துள்ள சேந்தமங்கலம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில், தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் விஜயா. இவருக்கு வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், பள்ளிக்கு முன்பு போராட்டத்தில் இறங்கினர்.
தற்போது, நாகை அருகே இசபெல்லா ஜூலி என்ற ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், மாணவர்கள் கதறி அழுதது காண்போரை நெகிழ வைத்தது. வடக்கு பொய்கை நல்லூரில், ஊராட்சி தொடக்கப்பள்ளியில், இசபெல்லாஜூலி என்ற ஆசிரியை, பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மாணவர்கள், ஆசிரியையை சூழ்ந்து கொண்டு கதறி அழுதனர்.
தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவே கல்வித் துறையில் ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பது ஆறுதல் அளிப்பதாக, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்... அன்புடன் இருக்கின்றனர்... அவர்களை, மாணவர்கள் மதிக்கின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர் - மாணவர் உறவுகளில் நடைபெற்று வரும் இந்த மாற்றம் ஒரு புதிய அத்தியாயத்தின் துவக்கம் என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Next Story