தனியார் பள்ளிகளில் கோச்சிங் சென்டர்கள் நடத்த தடை - தமிழக அரசு
போட்டி தேர்வுகளுக்காக தனியார் நிறுவனங்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்த கூடாது என தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் கோச்சிங் சென்டர்கள் நடத்த தடை
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சில தனியார் பள்ளிகள், போட்டித் தேர்வுகளுக்காக 6ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு தனியாக பயிற்சி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக புகார் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீட், ஜே.இ.இ., போன்ற போட்டி தேர்வுகளுக்கு வர்த்தக ரீதியில் தனியார் நிறுவனங்களை வைத்து, பள்ளி நேரத்தில் பள்ளி வளாகத்தில் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தக் கூடாது என்றும், இது போன்ற பயிற்சி வகுப்புகளில் எந்த மாணவரும் சேர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை தவிர, சிறப்பு வகுப்புகளுக்காக கூடுதலாக எந்த தொகையும் மாணவர்களிடம் இருந்து வசூலிக்க கூடாது என்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். இதை மீறும் தனியார் பள்ளிகள் மீது,
உரிமம் ரத்துச் செய்தல் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. விதிகளை மீறும் தனியார் பள்ளிகளை கல்வித்துறை உயர் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Next Story