"தாலியை வச்சு விவசாயம் பண்ணேன்"..கருகிய நெற்பயிர்கள்..கலங்கும் விவசாயிகள்
மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடைவரை சென்று சேர்ந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தாலும், தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்...
ஜூன் 12ம் தேதி, தண்ணீர் திறக்கப்பட்டதும், மனம்
குளிர்ந்த திருவாரூர் மாவட்ட விவசாயிகள், சுமார் 80,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணியை உற்சாகமாக தொடங்கினர்.
ஆனால் எதிர்பார்த்தபடி மேட்டூர் தண்ணீர் கடைமடை பகுதியான ஆதிரங்கம், வங்கநகர், மருதவனம், மாங்குடி, களப்பால், உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய அளவுக்கு
வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது.
வேதனை அடைந்த விவசாயிகள், குளம், குட்டைகளில் உள்ள நீரை எஞ்சின் மோட்டார்கள் மூலம் இரைத்து வயலுக்கு பாய்ச்ச தொடங்கினர். அந்த தண்ணீரும் போதுமானதாக இல்லாததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் விவசாயிகள்.
ஏழு ஆண்டுகளாக அரசால் தூர்வாரப்படாத மங்கள வாய்க்காலை, சொந்த செலவில் பொக்லைன் இயந்திரம் கொண்டு தூர் வாரியும், கடைமடை பகுதிக்கு தண்ணீர்
வந்து சேரவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
வறண்டு கிடக்கும் வாய்க்காலில் தண்ணீர் வராத என்று ஏக்கத்தோடு காத்திருக்கும் விவசாயிகள், அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் திறந்தால் மட்டுமே மிஞ்சிய பயிர்களை காப்பாற்ற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மகனின் படிப்பிற்காக வைத்திருந்த பணம், மனைவியின் தாலியை அடகு வைத்து நெல் விதைத்தவர்கள், வட்டிக்கு கடன் வாங்கி விதைத்த விவசாயிகள் , பயிர்கள் கருகுவதை பார்த்து கண்ணீர் வடித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயி
போர்க்கால அடிப்படையில் கால்வாய்கள் தூர்வாரி கூடுதல் தண்ணீரை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும். கருகிய நெற்பயிரை நேரில் ஆய்வு செய்து, தகுந்த இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கடைமடை விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.