அடுத்த மாதம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடக்கம்..இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்கள்..
கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார்? யார்?... இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
கடந்த 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்தியா முதல் முறையாக கிரிக்கெட் உலகக்கோப்பையை முத்தமிட்டது. அதற்குப் பிறகு இந்தியா உலகக்கோப்பையை வெல்ல சுமார் 3 தசாப்தங்கள் ஆகின. கடந்த 2011ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் தோனியின் அந்த ஒற்றை சிக்சர், கோடிக்கணக்கான ரசிகர்களின் 28 ஆண்டு கால ஏக்கத்தை தணித்தது.
2011ம் ஆண்டு வெற்றிக்குப் பிறகு, 2015 மற்றும் 2019 உலகக்கோப்பை தொடர்களில் அரையிறுதியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி கண்டு, ரசிகர்களின் இதயங்களை நொறுக்கியது. உலகக்கோப்பையை இந்தியா வென்று, மீண்டும் 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. மீண்டும் ரசிகர்கள் மத்தியில் ஏக்கம் எழுந்திருக்கிறது.
இத்தகைய சூழலில், 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 5ம் தேதி தொடங்கவுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை, தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் இலங்கையில் வெளியிட்டார். எதிர்ப்பார்த்ததைப் போலவே ஆசியக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களே, உலகக்கோப்பை தொடரிலும் இடம்பெற்றுள்ளனர்.
கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் துணை கேப்டனாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். பேட்டர்கள் சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
விக்கெட் கீப்பர்கள் கே.எல்.ராகுல், இஷான் கிஷான், ஆல்-ரவுண்டர்கள் ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.
சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், முகமது ஷமி உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்று மிரட்டக் காத்துள்ளனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்பின்னரான யுஸ்வேந்திர சஹாலுக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. சஹாலை சேர்க்காமல்போனது சரிதானா என்பதற்கு அடுத்த மாதம் பதில் கிடைக்கும். ஆசியக் கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ள திலக் வர்மா, சஞ்சு சாம்சன், பிரஷீத் கிருஷ்ணாவும் அணியில் சேர்க்கப்படவில்லை.
தமிழக வீரர் அஸ்வினும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. கடந்த உலகக்கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் என 2 தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்று இருந்தநிலையில், தற்போது தமிழகத்தில் இருந்து ஒருவர் கூட இடம்பெறவில்லை.
அட்டகாசமான பேட்டிங் லைன்-அப், நிலையான பவுலிங் லைன்-அப் என சரிசம பலத்துடன் இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், உலககக்கோப்பை கிரிக்கெட் ஜுரம் ரசிகர்களிடம் தொற்றத் தொடங்கியுள்ளது.