உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவு.. பேட்டர்களில் 765 ரன்களுடன் முதலிடம் பிடித்த கோலி..
அதிக ரன்கள் அடித்த பேட்டர்கள் பட்டியலில் விராட் கோலி, முதலிடம் பிடித்தார். 11 போட்டிகளில் ஆடிய கோலி 765 ரன்கள் சேர்த்தார். 6 அரைசதமும், 3 சதமும் இதில் அடக்கம்... சச்சினின், ஒரு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை.... சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை எல்லாம் முறியடித்து சாதனை நாயகனாக வலம் வந்தார் விராட்..
அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி... வெறும் ஏழே போட்டிகளில் 24 விக்கெட்டுகளை சாய்த்தார் ஷமி... இவற்றில் அதிகபட்சமாக நியூசிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் 7 விக்கெட்டுகளை ஷமி வீழ்த்தினார்.
அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டிகாக்... ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டிகாக், 4 சதங்களை நடந்து முடிந்த உலகக்கோப்பையில் விளாசினார்.
அதிக சிக்சர்கள் அடித்த பேட்டர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா....11 போட்டிகளில் 31 சிக்சர்களை விளாசியுள்ளார் ஹிட்மேன் ரோகித்...
அதிக கேட்ச்சுகள் மற்றும் ஸ்டம்பிங்ஸ் செய்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டிகாக் முதலிடம் வகிக்கிறார்.. 20 பேட்டர்களை டிகாக் ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார்.
அதிகபட்ச தூரத்துக்கு சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்து வீரர் டேரைல் மிட்செல் முதலிடம் பிடித்து இருக்கிறார். இந்தியாவிற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் 107 மீட்டர் தூரத்துக்கு இமாலய சிக்சர் அடித்தார் மிட்செல்..
ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் முதலிடம் பிடித்தார்... ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தனியொருவனாகப் போராடி, அசாத்தியத்தை சாத்தியப்படுத்திய மேக்ஸ்வெல் 201 ரன்கள் விளாசினார்.