அமெரிக்க ஓபன் - மகுடம் சூடிய சின்னர்

x

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்......

நியூயார்க் நகரின் ஆர்தர் ஆஷ் (Arthur Ash) மைதானத்தில் இத்தாலியைச் சேர்ந்த நம்பர் ஒன் வீரர் சின்னரும், அமெரிக்க வீரர் ஃபிரிட்ஸும் (Fritz) சாம்பியன் பட்டத்துக்காக களமாடினர்.

சொந்த மண்ணில் ஆடிய ஃபிரிட்ஸுக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. ஆனால் அவர்களின் ஆரவாரம் அதிக நேரம் நிலைக்கவில்லை...

ஆரம்பம் முதலே சின்னர் அதிரடி காட்ட, ஃபிரிட்ஸால் ஈடுகொடுத்து ஆட முடியவில்லை.....

பேஸ் (base) லைனில் ஷாட்களைப் பறக்கவிட்டு புள்ளிகளைக் குவித்த சின்னர், 6க்கு 3 என்ற கணக்கில் முதல் செட்டை எளிதில் தனதாக்கினார்.


இரண்டாவது செட்டும் முதல் செட்டின் நீட்சியாகவே அமைந்தது. ஆம்.... இம்முறையும் சின்னரின் கையே ஓங்கியது. டிராப் (Drop) ஷாட்கள் மூலம் ஃபிரிட்ஸை அலையவிட்ட சின்னர், 6க்கு 4 என்ற கணக்கில் 2வது செட்டைக் கைப்பற்றினார்.

அடுத்து நடைபெற்ற மூன்றாவது செட்டில் ஃபிரிட்ஸ் சற்று சவால் அளித்தார். இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்ததால் 3வது செட்டில் அனல் பறந்தது.

அந்த செட்டின் ஆரம்பத்தில் ஃபிரிட்ஸ் முன்னிலைப் பெற்றாலும், அதை பிரேக் செய்து முன்னேறிய சின்னர், 7க்கு 5 என்ற கணக்கில் செட்டைக் கைப்பற்றி, நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.

இறுதிப்போட்டியில் ஃபிரிட்ஸை சிதறடித்து, முதல் முறையாக அமெரிக்க ஓபனை முத்தமிட்டு இருக்கிறார் சின்னர்.... அமெரிக்க ஓபனை வெல்லும் முதல் இத்தாலி வீரரும் சின்னர்தான்...

23 வயதே ஆகும் சின்னருக்கு இது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம்... ஏற்கனவே இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய ஓபனை சின்னர் வென்றார்....

சில வாரங்களுக்கு முன்பு ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார் சின்னர். அப்போது அவர் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சர்ச்சையில் இருந்து விடுவிக்கப்பட்டபோதும் அவரின் திறன் சந்தேகிக்கப்பட்டது.

அப்போது சின்னர் கூறிய ஒரே வார்த்தை... நான் தவறு செய்யவில்லை.... கடினமான காலத்தைக் கடந்து வருவேன் என்பதுதான்....

ஆம்... இப்போது இடர்களைக் கடந்து தன்னை விமர்சித்தவர்களுக்கு சாம்பியன் பட்டம் மூலம் பதிலடி கொடுத்து சாதித்துக் காட்டியிருக்கிறார் சின்னர்.........


Next Story

மேலும் செய்திகள்