தொடங்கியது TNPL திருவிழா.. முதல் போட்டியில் CSGயை மடக்கிய LKK

x

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி வென்றது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் எட்டாவது சீசன் சேலத்தில் கோலாகலமாக தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் பாபா அபராஜித் பவுலிங் தேர்வு செய்தார்.

தொடர்ந்து ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பாலசுப்பிரமணியம் சச்சின் 63 ரன்கள் எடுத்தார். சேப்பாக் பவுலர் அபிஷேக் தன்வர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

142 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர் சந்தோஷ் குமார் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஜெகதீசன் 18 ரன்களில் போல்டானார்.

பிரதோஷ் ரஞ்சன் பால் 40 ரன்களும் கேப்டன் பாபா அபராஜித் 38 ரன்களும் சேர்த்தனர். மிடில் ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிதானமாக ஆடியதால் பின்னடைவு ஏற்பட்டது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் மட்டுமே எடுக்க 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லைகா கோவை கிங்ஸ் தொடரை வெற்றியுடன் தொடங்கியது.


Next Story

மேலும் செய்திகள்