பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்...வரலாறு படைத்தார் மனு பாக்கர்...
பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை மனு பாக்கர், இலக்கை துல்லியமாக சுட்டார். மொத்தமாக 221 புள்ளி 7 புள்ளிகள் பெற்ற மனு பாக்கர், 3ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தினார். இதன்மூலம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதல் பதக்கத்தை வென்று பதக்கக் கணக்கை தொடங்கி உள்ளது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது வீராங்கனையான மனு பாக்கர், ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா வெல்லும் 5வது பதக்கம் இதுவாகும். பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.