பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள்...
பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீப்பில் சேஸ் போட்டி இந்திய வீரர் அவினாஷ் சேபில் தோல்வி அடைந்தார். 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீப்பில் சேஸ் இறுதிப்போட்டியில் கலந்துகொண்ட அவினாஷ் சேபில், பந்தய தூரத்தை 8 நிமிடம் 14 விநாடிகள் 18 மணித்துளிகளில் கடந்தார். இதனால் அவினாஷ் சேபிலுக்கு 11வது இடமே கிடைத்தது.
பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது. காலிறுதி ஆட்டத்தில் ஸ்ரீஜா அகுலா, மனிகா பத்ரா, அர்ச்சனா கமத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, ஷான், யுயான், அன்னெட் ஆகியோர் அடங்கிய ஜெர்மனி அணியிடம் மோதியது. இதில் 3க்கு 1 என்ற கேம் கணக்கில் ஜெர்மனி அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. தோல்வி அடைந்த இந்திய அணி பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறியது,
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள மல்யுத்த வீராங்கனை அன்டிம் பங்கல் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட உள்ளார். மகளிர் 53 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தின் முதல் சுற்று போட்டியில் அன்டிம் பங்கல் தோல்வி அடைந்தார். போட்டிக்குப் பிறகு விடுதிக்கு சென்ற அன்டிம் பங்கல், தனக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையை, தனது சகோதரியிடம் வழங்கி ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து தன் உடைமைகளை எடுத்து வரச்சொல்லி உள்ளார். விதிகளை மீறி ஒலிம்பிக் கிராமத்திற்குள் நுழைந்த அன்டிம் பங்கலின் சகோதரியை பாதுகாவலர்கள் பிரான்ஸ் போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர். இத்தகைய சூழலில் விதிகளை மீறி செயல்பட்ட அன்டிம் பங்கலை உடனே இந்தியாவிற்கு அனுப்ப முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக இந்திய ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.