5வது முறை ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா

x

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது இந்தியா... இது பற்றி பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்....

சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் தோல்வியே காணாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா, இறுதிப்போட்டியில் தொடரை நடத்திய சீனாவை எதிர்கொண்டது.

சமீபத்தில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியா, சீனாவை எளிதில் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நடந்ததோ வேறு... ஆரம்பம் முதலே சீன வீரர்கள் தடுப்பாட்டத்தை தீவிரப்படுத்தினர்... இந்தியாவிற்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை சீனா முறியடிக்க முதல் காற்பகுதி கோல் இல்லாமல் முடிந்தது.

அடுத்தடுத்த காற்பகுதிகளிலும் சீன வீரர்களின் தடுப்பு அரணைத் தாண்டி இந்திய வீரர்களால் கோல் அடிக்க முடியாமல் போனது. சீன வீரர்களின் கோல் முயற்சிகளையும் இந்திய வீரர்கள் தடுத்தனர்.

இரு தரப்பினரும் கோல் அடிக்காமல் முட்டுக்கட்டை போட்ட விதமாக போட்டி நகர்ந்ததால், பெனால்டி ஷூட் அவுட்டிற்கு ஃபைனல் செல்லும் என கருதப்பட்டது.

அப்போது, சீனாவின் தடுப்பு அரணைத் தகர்த்து ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் கோல் அடித்தார் இந்திய வீரர் ஜுக்ரஜ் சிங்.... கடைசிக் கட்டத்தில் முன்னிலைப் பெற்றது இந்தியா...

ஜுக்ரஜ் சிங் அடித்த கோலே இந்தியாவின் வெற்றி கோலாகவும் மாற பரபரப்பாக நடைபெற்ற போட்டியின் முடிவில் 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா,, சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

இந்த தொடரில் 7 கோல்கள் அடித்த இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

ஐந்தாவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை வென்று சாதனை படைத்துள்ள இந்தியா, ஆசியாவில் தங்களை அசைக்க முடியாது என்பதை நிலைநாட்டி ஆசியாவின் அரசனாக மீண்டும் மகுடம் சூடியுள்ளது....


Next Story

மேலும் செய்திகள்