அடுத்தடுத்து விழுந்த விக்கெட்ஸ் - "நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ" - நியூசி. இமாலய வெற்றி
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 16வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. தொடர்ந்து, பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் கான்வே 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் வில் யங் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா 32 ரன்களுக்கு அஸ்மதுல்லா ஓவரில் போல்டாக, அதே ஓவரில் வில் யங்கும் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேரைல் மிட்செல், ரஷீத் கானின் சுழலில் வீழ்ந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி தடுமாறியபோது, கேப்டன் டாம் லாதம் - கிளன் பிலிப்ஸ் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரைசதம் அடித்த பிறகு அதிரடி காட்டினர். 71 ரன்களுக்கு பிலிப்ஸூம், 68 ரன்களுக்கு லாதமும் ஆட்டமிழக்க, கடைசி ஓவர்களில் சாப்மன் அதிரடியாக ஆடினார். இதனால், 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது.
பின்னர் 289 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தானில் தொடக்க வீரர்கள் குர்பாஸை, மேட் ஹென்ரியும் சாட்ரானை போல்ட்டும் வெளியேற்றினர். சற்று நேரம் களத்தில் இருந்த ரஹமத் ஷா 36 ரன்களில் ரச்சின் ரவீந்திராவிடம் அவுட் ஆனார். நியூசிலாந்து பவுலர்கள் சான்ட்னர் மற்றும் ஃபெர்குஸனின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் ஆப்கானிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். எந்த வீரரும் பெரிதாக பார்ட்னர்ஷிப் அமைக்காத நிலையில், 35வது ஓவரில் 139 ரன்களுக்கு ஆப்கானிஸ்தான் ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம், 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து, நடப்பு உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 4வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.