"மொத்தமாக ஒய்வு" - அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட சென்னை வீராங்கனை
அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய மகளிர் அணியில் ஆடிய தமிழக கிரிக்கெட் வீராங்கனை நிரஞ்சனா அறிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை நிரஞ்சனா, கடந்த 2008ம் ஆண்டு இந்திய மகளிர் அணியில் அறிமுகமானார். பவுலிங் ஆல்ரவுண்டராக அறியப்படும் அவர், இந்திய அணிக்காக 22 ஒருநாள் போட்டிகள், 14 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். உலகக்கோப்பை தொடருக்கான இந்திய மகளிர் அணியிலும் அங்கம் வகித்த அவர், தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார். 36 வயதை நெருங்கும் நிரஞ்சனா இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, பிசிசிஐ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தனது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார். வாழ்க்கையின் மற்றொரு அத்தியாயத்தில் அனைவரையும் சந்திக்க இருப்பதாகவும் நிரஞ்சனா தெரிவித்துள்ளார்.