மீண்டும் கேப்டனாக தோனி - பின்னணி என்ன...?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை தோனியிடம் ஒப்படைத்து இருக்கிறார் ஜடேஜா.... அதற்கான காரணம் என்ன என்பதைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகுகிறார்.... தோனியின் வழிகாட்டுதலில் கேப்டனாக ஜடேஜா செயல்படுவார் என நடப்பு ஐபிஎல் ஆரம்பிப்பதற்கு முன்பாக அறிவித்த சென்னை நிர்வாகம்,...
தற்போது சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலகுகிறார்.... மீண்டும் கேப்டனாக தோனி செயல்படுவார் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
பல்வேறு நட்சத்திர வீரர்களைக் கொண்டிருந்தும் நடப்பு ஐபிஎல் தொடரில் பிரகாசிக்கத் தவறி வருகிறது சென்னை....
ஜடேஜா தலைமையில் 8 போட்டிகளில் ஆடி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றிருக்கும் சென்னையின் செயல்பாடு, 2020-ம் ஆண்டு சீசனின் நீட்சியாக உள்ளது.
சிறப்பான ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமையாதது, பவுலிங் லைன்-அப் பலகீனமாக இருப்பது, பீல்டிங்கில் கேட்ச்சுகளை தவறவிடுவது என சென்னையின் தொடர் தோல்விக்கு காரணங்கள் அடுக்கப்பட்டாலும்,.....
அணியின் கேப்டனாக ஜடேஜா எடுத்த முடிவுகள், சென்னையின் சறுக்கலுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
எந்த நேரத்தில் எந்த பவுலரைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் ஜடேஜாவுக்கு அனுபவம் போதவில்லை எனக் கூறப்படும் நிலையில்,...
கேப்டன் பொறுப்பேற்றபின் பேட்டிங், பவுலிங், ஏன்... ஃபீல்டிங்கிலும் கூட கேட்ச்சுகளைக் கோட்டைவிட்டு தடுமாறி வருகிறார் ஜடேஜா....
8 போட்டிகளில் ஆடி, வெறும் 112 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை மட்டுமே ஜடேஜா எடுத்திருப்பதற்கு, கேப்டன்ஷிப் பிரஷரே பிரதானக் காரணமாகக் கருதப்படுகிறது.
இதுமட்டுமின்றி டீப் திசையில் ஃபீல்டிங் செய்வதை ஜடேஜா வாடிக்கையாக வைத்திருப்பதால் பெரும்பாலான சமயம், தோனியே முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது.
தோனி களத்தில் இருப்பதால் பெயரளவிற்கே கேப்டனாக ஜடேஜா செயல்பட்டார் என்றும் கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.
என்னதான் கேப்டனாக மீண்டும் தோனி நியமிக்கப்பட்டாலும் விரைவில் அவர் 41 வயதை நெருங்க உள்ளார்.
ஆதலால் அடுத்துவரும் சீசன்களுக்காக புதிய கேப்டனை சென்னை தேடுவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதே யதார்த்தம்....
Next Story