சுழற்சி முறைக்கு சென்ற இந்திய அணி - நியூசி. டி 20 தொடரில் கோலிக்கு ஓய்வு

உலகக்கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் தோல்வியின் எதிரொலியாக, சுழற்சி முறையை கையாள இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
சுழற்சி முறைக்கு சென்ற இந்திய அணி - நியூசி. டி 20 தொடரில் கோலிக்கு ஓய்வு
x
இந்தியா பலமான அணி... நிச்சயம் டி 20 உலகக்கோப்பையை வெல்லும் என பலர் கணிக்க, சூப்பர் 12 சுற்றோடு வெளியேறி பல கோடி பேரை ஏமாற்றமடைய வைத்தது இந்திய அணி...

மோசமான ஆட்டம் ஒரு காரணம் என்றால், தொடர்ச்சியான போட்டிகளால் வீரர்கள் மனசோர்வு அடைந்ததும் தோல்விக்கு காரணம் என விமர்சனங்கள் எழுந்தன. பிசிசிஐ நிர்வாகமும் கடும் விமர்சனத்திற்குள்ளாகியது.

இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு மத்தியில், ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் திராவிட்...


வீரர்களின் மனநிலையை அறிந்துக்கொள்வது, பணிசுமையை பொறுத்து ஓய்வு வழங்குவது, மாற்று வீரர் சோபித்தாலும், சம்பந்தப்பட்ட வீரருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்குவது என வீரர்கள் பற்றி பிசிசிஐ நிர்வாகத்திடம் திராவிட் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகின

இதுதொடர்பாக ஒவ்வொரு வீரரிடமும் தனிப்பட்ட முறையில் உரையாடி, வீரர்களின் மனநிலை குறித்தும், எதிர்கால திட்டமிடல் குறித்தும் ஆலோசித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது


வீரர்கள் மன சோர்வு அடையாமல் இருக்க ஏற்கனவே இங்கிலாந்து அணி சுழற்சி முறையை கையாள்கிறது. ஜோ ரூட் டி20 போட்டியில் விளையாடாமல் இருப்பதும், பட்லர் போன்ற முக்கிய வீரர்களுக்கு அவ்வப்போது ஓய்வு வழங்குவதும் இதற்கு உதாரணங்கள்..

தற்போது, இந்த வழக்கத்தை இந்திய அணியும் கடைப்பிடிக்க தயாராகிவிட்டதாக அறிய முடிகிறது.

இதன் வெளிப்பாடு தான் நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் கோலி, பும்ராவிற்கு ஓய்வு அளிக்க எடுக்கப்பட்ட முடிவு..

இதேபோல், டெஸ்ட் தொடரில் ரோகித், பண்ட், பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எது எப்படி இருந்தாலும், இனிவரும் தொடர்களில் இதுபோன்ற சுழற்சி முறை நிச்சயம் கடைப்பிடிக்கப்படும் என்பதற்கான மறைமுக செய்தியே டி20, டெஸ்ட் அணிக்கான தேர்வு என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்