பி.சி.சி.ஐ. தலைவராக கங்குலி போட்டியின்றி தேர்வு
பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பி.சி.சி.ஐ. எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு வரும் 23ஆம் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கங்குலியை தவிர வேறு யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. இதனால், கங்குலி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது உறுதியாகி விட்டதாக ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் என்.ஸ்ரீவாசனுடன் மனு தாக்கல் செய்த சவுரவ் கங்குலி, பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பி.சி.சி.ஐ. தற்போது நெருக்கடி நிலையில் உள்ளதாகவும், அதனை சரி செய்வதே தமது முதல் பணி என்றும் கங்குலி கூறினார். வரும் 23ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கங்குலி தலைவராக அறிவிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக பதவியேற்க உள்ளார். பி.சி.சி.ஐ.யின் செயலாளராக மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உள்ளூரில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய கிரிக்கெட் அணியை , தனது தலைமையில் வெளிநாட்டிலும் சிறப்பாக செயல்பட வைத்தவர் கங்குலி. பெங்கால் புலி, கிரிக்கெட் தாதா என செல்லமாக அழைக்கப்படும் கங்குலி ,கடந்த 2000 ஆம் ஆண்டு இந்திய அணி மீது சாட்டப்பட்ட பல்வேறு சூதாட்ட புகார்களுக்கு பிறகு , கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடும் நெருக்கடிக்கு மத்தியில் கேப்டனாக பொறுப்பேற்ற கங்குலி , அணியின் மீது ஏற்பட்ட களங்கத்தை , கோப்பைகள் வென்று மீண்டும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார். இதன் பின் 2003 ஆம் ஆண்டு இந்திய அணியை உலக கோப்பையின் இறுதி போட்டி வரை அழைத்து சென்ற கங்குலி, இந்திய அணியின் சிறந்த கேப்டனாக உருவெடுத்தார். அதன் பின் சில சறுக்கல்கள் , ஏற்றங்கள் சந்தித்த கங்குலி 2012 ஆம் ஆண்டு அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவராக செயல்பட்டு வந்த கங்குலி, தற்போது பிசிசிஐ தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையிலும் ஐசிசி தொடர்களில் சொதப்பி வருவது இந்திய ரசிகர்களை சோகம் அடைய செய்துள்ளது. இதற்கு அணி தேர்வின் போது நிர்வாகத்தில் நடக்கும் குளறுபடிகள் தான் காரணம் என கிரிக்கெட் ஆர்வலர்கள் , வல்லுநர்கள் விமர்சனம் செய்துள்ள நிலையில் , ஆக்கோஷத்திற்கு பெயர் போன கங்குலி சில கடினமான முடிவுகள் எடுத்து இந்திய அணியை ஜொலிக்க வைப்பார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Next Story