பி.சி.சி.ஐ தலைவராக தேர்வாகிறார் சவுரவ் கங்குலி?
சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
பி.சி.சி.ஐ அமைப்பிற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இந்நிலையில் தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மற்றும் பி.சி.சி.ஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் ஆதரவுபெற்ற பிரிஜேஷ் படேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே, மேற்குவங்க மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்து வரும் சவுரவ் கங்குலியை பிசிசிஐ தலைவராக தேர்வுசெய்ய பெரும்பாலான மாநில கிரிக்கெட் சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிரிஜேஷ் படேலுக்கு, ஐ.பி.எல் அமைப்பின் தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோன்று பிசிசிஐ செயலாளராக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, பொருளாளராக மத்திய அமைச்சர் அனுராக் தாகூரின் சகோதரர் அருண் துமல் ஆகியோரும் ஒருமனதாக தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் பட்சத்தில், நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரையின்படி, பிசிசிஐ அமைப்பை கடந்த 33 மாதங்களாக நிர்வகித்து வரும் நிர்வாக குழுவின் பதவிக்காலம் முடிவுக்கு வரும்.
Next Story