இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் : 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் கேப்டன் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 279 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 120 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 79 ரன்களும் எடுத்தனர். 280 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தொடங்கிய நிலையில், மழை காரணமாக போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு, வெற்றி இலக்கு 270 ரன்களாக மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 42 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
விராட் கோலி சாதனை
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி படைத்தார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், தனது 42-வது சதத்தை பதிவுசெய்த விராட் கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்தார். கங்குலி 297 இன்னிங்ஸ்களில் விளையாடி 11 ஆயிரத்து 221 ரன்கள் எடுத்த நிலையில், அதனை 229 இன்னிங்ஸ்களிலேயே கோலி கடந்தார்.
சர்வதேச அளவில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 7-வது இடத்திற்கும் அவர் முன்னேறினார். இந்நிலையில் தனது சாதனையை முறியடித்த விராட் கோலிக்கு, சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் 452 இன்னிங்ஸ்களில் விளையாடி 18 ஆயிரத்து 426 ரன்கள் குவித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளார். அத்துடன் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் ஜாவித் மியாண்டட்டின் சாதனையையும் கோலி முறியடித்தார். அந்த அணிக்கு எதிராக மியாண்டட் ஆயிரத்து 930 ரன்கள் குவித்து முன்னிலையில் இருந்த நிலையில், அந்த சாதனையையும் கோலி கடந்தார்.
Next Story