சென்னையில் எப்போது மின் விநியோகம் சீராகும்? - அமைச்சர் வெளியிட்ட அறிக்கை
துணை மின் நிலையங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொது மக்களின் நலன் கருதி, மின் விநியோகம் வழங்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திங்கள் கிழமையன்று, 112 மெகா வாட்டாக இருந்த சென்னையின் மின் தேவை, செவ்வாகிழமை இரவு ஏழரை மணி நிலவரப்படி ஆயிரத்து 488 வாட்டாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். செவ்வாய் நண்பகல் நிலவரப்படி, சென்னை மாநகரத்தின் மையப்பகுதிகளில் மின்சாரம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். பல்வேறு இடங்களில் ஒரு பகுதிக்கு சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சில பகுதிகளிலும், துணை மின் நிலையங்கள், மின்னூட்டிகள் உள்ளிட்டவற்றிலும், தேங்கியுள்ள மழைநீர் மற்றும் ஈரப்பதம் காரணமாக, பொது மக்களின் நலன் கருதி எச்சரிக்கையுடன் மின் விநியோகம் வழங்கும் பணி, படிப்படியாக நடைப்பெற்று வருவதாக கூறியுள்ள அவர், சூழலை புரிந்து கொண்டு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.