விக்கிரவாண்டி ரிசல்டில் ஓட்டுகளை கணக்கு போட்டால் பகீர் விடை - எதிர்கட்சிகளே குமுறும் சம்பவம்
விக்கிரவாண்டி ரிசல்டில் ஓட்டுகளை
கணக்கு போட்டால் பகீர் விடை
எதிர்கட்சிகளே குமுறும் சம்பவம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில் இருந்து விலகிய அ.தி.மு.க.வினர் ஓட்டுக்கள் எப்படி பிரிந்தது என்பதை அலசுகிறது இந்த தொகுப்பு...
நாடாளுமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டியில் 65,365 வாக்குகளை வாங்கிய அதிமுக, இடைத்தேர்தலில் போட்டியிலிருந்து விலகியது.
அக்கட்சியின் வாக்கை குறிவைத்து அனைத்து கட்சிகளும் பிரசாரம் செய்தன. இதனால் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வாக்கு யாருக்கு போனது என்ற எதிர்பார்ப்பு அதிகமாக காணப்பட்டது. விக்கிரவாண்டி தொகுதியை 25 பகுதிகளாக பிரித்து, அங்கு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வாங்கிய வாக்கு என்ன...? இப்போது அது எப்படி மாறியிருக்கிறது என்பதை தந்தி டிவி ஆராய்ந்தது.
வாக்கு எண்ணிக்கை தொடக்கக்கட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியைவிட அதிமுக அதிக வாக்குப்பெற்ற கருவாச்சி பகுதியை பார்த்த போது திமுக 1,713 வாக்குகளை கூடுதலாக பெற்றிருந்தது.
கருவாச்சி பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 2,726 வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால் அப்போது 1,921 வாக்குகளை பெற்ற திமுக, இடைத்தேர்தலில் 3,634 வாக்குகளை பெற்றிருக்கிறது. தொகுதியில் பாமகவும் 1,466 வாக்குகளை கூடுதலாக பெற்றிருந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் 1,465 வாக்குகளை பெற்ற பாமக இப்போது, இடைத்தேர்தலில் 2,931 வாக்குகளை பெற்றுள்ளது. அதேவேளையில் அதிமுக வாக்கை கேட்ட நாம் தமிழர் கட்சி 55 வாக்கை இழந்திருந்தது.
திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா ஏரியாவான அன்னியூர் பகுதியில் அதிமுக வாக்குகளை அப்படியே அள்ளியிருந்தது திமுக... நாடாளுமன்றத் தேர்தலில் அங்கு திமுக கூட்டணி 1,656 வாக்குகளை பெற்றிருந்த வேளையில், இடைத்தேர்தலில் திமுக 4,726 வாக்குகளை பெற்றுள்ளது. 3,070 வாக்குகள் திமுகவுக்கு கூடுதலாக கிடைத்துள்ளது. அதுவே நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிட்டால்.. பாமகவுக்கு அன்னியூர் பகுதியில் 55 வாக்குகள் மட்டுமே கூடுதலாக கிடைத்திருந்தது.
திமுக கூட்டணி 25 பகுதிகளிலும் நாடாளுமன்றத் தேர்தலில் வாங்கிய வாக்கைவிடவும், 1,500 முதல் 3,070 வரையில் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. பாமகவை பொறுத்தவரையில் நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது அன்னியூர் தவிர்த்து மற்ற பகுதிகளில் 400 முதல் 1,600 வாக்குகள் வரையில் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தது.
ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் திமுக கூட்டணிக்கு 72,188 வாக்குகள் கிடைத்திருந்தது. இப்போது அக்கூட்டணிக்கு 1,24,053 வாக்குகளை கிடைத்திருக்கிறது. 51,868 வாக்குகள் கூடுதலாக கிடைத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் 32,198 வாக்குகளை பெற்ற பாமகவுக்கு இடைத்தேர்தலில் கூடுதலாக 24,098 வாக்குகள் கிடைத்திருக்கிறது. மறுபுறம் நாம் தமிழர் கட்சிக்கு 2,250 வாக்குகள் மட்டும் அதிகமாக கிடைத்திருக்கிறது.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில் வாக்குகள் பல திசைகளில் பிரிந்திருந்தாலும் அதிமுக வாக்கு பெருவாரியாக திமுக வசமே சென்றிருக்கிறது... அதுவே பாமனவும் கணிசமான அளவு அதிமுக வாக்குகளை பிரித்திருக்கிறது என்பதேயே புள்ளி விபரங்கள் காட்டுகிறது.