அதிர போகும் வாரணாசி.. அபிஜித் முகூர்த்தத்தில் முதல் அடி வைக்கும் மோடி
நாளை பிரதமர் மோடி அபிஜித் முகூர்த்தத்தில் வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார்...
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் 3வது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். வரும் ஜூன் 1ம் தேதி வாரணாசி தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறும். முன்னதாக இன்று மாலை வாரணாசி செல்லும் பிரதமர் அங்கு பிரம்மாண்ட சாலை பேரணியில் பங்கேற்கிறார்... பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள மதன் மோகன் மாளவிகாவின் திருவுருவை சிலைக்கு மாலை அணிவித்து சாலை பேரணியை தொடங்கும் பிரதமர் மோடி, நகரின் பல்வேறு இடங்களிலும் சாலை மார்க்கமாக பேரணியாக சென்று புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டு பேரணியை நிறைவு செய்கிறார். தொடர்ந்து நாளைய தினம் அபிஜித் முகூர்த்தம் எனப்படும் அரிதான முகூர்த்தத்தில் தமது வேட்பு மனுவை பிரதமர் மோடி தாக்கல் செய்கிறார். பிரதமரின் வேட்புமனுத் தாக்கலின் போது
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வேட்பு மனுவை அயோத்தி ராமர் கோவில் பிரான பிரதிஷ்டையை மேற்கொண்டு பிரான பிரதிஷ்டைக்கு நேரம் குறித்த ஞானேஷ்வர் சாஸ்திரி உள்பட 4 பேர் வழிமொழிய உள்ளது குறிப்பிடத்தக்கது.