தவெக மேடையில் மாஜி அமைச்சர்கள், அதிமுகவின் 4 முக்கிய புள்ளிகள்? -அரசியலையே அதிரவைக்கும் விஜய் மாநாடு
தவெக மேடையில் மாஜி அமைச்சர்கள்
அதிமுகவின் 4 முக்கிய புள்ளிகள் யார்?
தமிழக அரசியலையே அதிரவைக்கும் விஜய் மாநாடு
கை கோர்க்கும் காங். பிரபலம்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், பல முக்கிய தலைவர்கள் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காவல்துறை அனுமதிக்காக காத்திருந்த தமிழக வெற்றிக் கழக கட்சித்தலைமை, அனுமதி கிடைத்ததும் மின்னல் வேகத்தில் பணிகளை தொடங்கியது.
இந்நிலையில் தான் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளில் இருந்து பல மூத்த தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது..
குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், அவர்களை மாநாட்டின் போது மேடையில் அமர வைக்கவுள்ளதாக தவெக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அதிலும் அதிமுகவில் இருந்து 4 நிர்வாகிகளும், காங்கிரஸ் கட்சியிலுள்ள மூத்த நிர்வாகிகளை இணைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடந்து வருகிறது.
அந்த வகையில் அதிமுகவில் அமைப்பு செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அவர் விஜய் கட்சிக்கு செல்கிறார் என பேசப்படுகிறது.
இதுமட்டுமன்றி கட்சியில் பல மூத்த தலைவர்களை இணைக்க பல கட்ட பேச்சுவார்த்தைகளை கட்சித்தலைமை முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கட்சியில் இணைபவர்களை மேடையேற்ற தவெக திட்டமிட்டு வரும் சூழலில், மாநாடு தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தவெக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஏற்கனவே பெரிய தலைவர்களை கட்சிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை தொடர்ந்து வரும் சூழலில், மாநாடு நடத்த அனுமதி கிடைத்தும் குறுகிய காலமே உள்ளதால், பம்பரமாய் சுழன்று வருகின்றனராம் கட்சி நிர்வாகிகள்.
மற்றொரு புறம், விஜய்யின் கட்சியை ப்ரமோட் செய்யும் வகையில், நட்சத்திரங்களின் வாழ்த்து செய்திகளையும் ஒரு குழு பெற்று வருகிறதாம். குறிப்பாக பவன் கல்யாண், சிரஞ்சீவி போன்ற அரசியல் அனுபவம் கொண்ட பெரிய நடிகர்களிடம் வீடியோ மூலம் வாழ்த்தும் பெறப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது
விக்கிரவாண்டியில் சுமார் 86 ஏக்கர் பரப்பளவில் நடைபெறவுள்ள மாநாடுக்கான பணிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள்..