"வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி" - ராகுல் காந்தி போட்ட ட்வீட்
எக்ஸ் தளத்தில் ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியை இணைத்து, இந்தியாவில் இவிஎம் இயந்திரங்கள் ஒரு கருப்பு பெட்டியாக இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார். அவர் பகிர்ந்துள்ள செய்தியில், மும்பை வடமேற்கு தொகுதியில் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற சிவசேனா வேட்பாளர் ரவீந்திரா வைக்கரின் உறவினர் மங்கேஷ் பண்டில்கார் வாக்கு எண்ணிக்கை நாளில் இவிஎம் இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட செல்போனை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்கும் மும்பை போலீஸ், செல்போன் தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறாதா என்பதை அறிய அதனை தடயவியல் துறை ஆய்வுக்கு அனுப்பியிருப்பதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த செய்தியை குறிப்பிட்டே இவிஎம் இயந்திரங்கள் கருப்பு பெட்டியாக இருக்கிறது, அதனை பரிசோதிக்ககூட யாரையும் அனுமதிப்பதும் இல்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார். நமது தேர்தல் நடைமுறையில் வெளிப்படைதன்மை குறித்து மிகுந்த கவலை எழுவதாக குறிப்பிட்டிருக்கும் ராகுல் காந்தி, சம்பந்தப்பட்ட அமைப்புகள் பொறுப்போடு இல்லாதபோது, ஜனநாயகம் ஒரு ஏமாற்று நாடகமாக மாறி, மோசடிக்கு ஆளாகிறது எனவும் விமர்சித்துள்ளார்.