"ரூ.30 லட்சம் கோடியை விழுங்கிய ஜூன் 4 மோடி, அமித்ஷா கணக்கில் பேரிடியா?" - பரபரப்பை கிளப்பிய ராகுல்
போலியான கருத்து கணிப்புகளை வெளியிட்டதால், 30 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளதை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...
நாடாளுமன்ற தேர்தல் மீது எவ்வளவு எதிர்ப்பார்ப்பு இருந்ததோ, அதே அளவு பங்குச்சந்தை மீதும் முதலீட்டாளர்களுக்கு அதிக எதிர்ப்பார்ப்பு இருந்தது..
காரணம், ஆட்சியில் மாற்றம் கண்டால், அதற்கேற்ற முதலீடு, ஆட்சி மாற்றம் இல்லையென்றால் அதற்கேற்ற முதலீடு செய்ய வேண்டும் என கணித்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஜூன் 1ம் தேதிக்கு பின்னர் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பாஜக கூட்டணிக்கு சாதகமான முடிவுகளே வந்தன.
பெரும்பாலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு மேல் தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என கணிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கருத்துகணிப்புகளை மனதில் வைத்துக் கொண்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய... 3ம் தேதி சென்செக்ஸ் சுமார் 2500 புள்ளிகள் ஏற்றம் கண்டு 76, 468-ல் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்நிலையில், ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகளில் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 4 ஆயிரத்து 390 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன. கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச வீழ்ச்சி இது தான் என்பது பங்குச்சந்தை நிபுணர்களின் கருத்தாகவும் உள்ளது..
காரணம், கூட்டாட்சி முறையில், அரசின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாவதோடு, பொருளாதாரத்துடன் தொடர்புடைய திட்டங்களில் இழுபறி நீடிக்கும் என்பதால், முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்பட்டு, இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனை சுட்டிக்காட்டி செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, மே 13ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் 4ம் தேதிக்கு முன்னர் பங்குகளை வாங்குமாறு கூறியதாக குறிப்பிட்டதோடு, மே 19ம் தேதி பேட்டி ஒன்றில் பேசிய நரேந்திர மோடி, ஜூன் 4ம் தேதி பங்குச்சந்தையில் சாதனைகளை முறியடிக்கும் என்றார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் 5 கோடி மக்களிடம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும்படி வலியுறுத்தியது ஏன் ? என கேள்வி எழுப்பியதோடு, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் மூலம், சிறு முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
இதன் காரணமாக, தேர்தல் முடிவுகள் வெளியான தினத்தன்று பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு 30 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்..
தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாகவே முதலீடு செய்து ஐந்து கோடி சம்பளத்தில் பெரும் லாபம் ஈட்டிய பாஜகவுக்கும், போலி எக்ஸிட் போஸ்டர்களுக்கும், சந்தேகத்துக்கு இடமான வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் என்ன தொடர்பு?. எனவும் கேள்வி எழுப்பினார்.
இந்த மிகப்பெரிய பங்குச் சந்தை சரிவு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தற்போது இந்திய கூட்டணி சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்படலாம் என கருதப்படும் நிலையில், பங்குச்சந்தை விவகாரத்துடன் பரபரப்பை கிளப்பியுள்ளார் ராகுல் காந்தி..