ராகுலை சாய்த்த 'ஜஸ்ட்' 0.85% மோடி கனவிலும் நினைக்காத முடிவு - நாடே எதிர்பாரா `பொலிடிகல்’ டுவிஸ்ட்

x

2016-ல் தமிழகத்தில் நடந்தது போல் அரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஒரு சதவீதத்திற்கு குறைவான வாக்குகளில் வெற்றி வாய்ப்பை காங்கிரஸ் பறிகொடுத்தது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.

அரியானாவில் காங்கிரஸ் வெற்றிப்பெறும் என கருத்துக்கணிப்புகள் வெளியான வேளையில், முடிவு அப்படியே தலைகீழாக போய்விட்டது... மீண்டும் பாஜக என்ற முடிவு வெளியாக அரியானாவில் பாஜக வெற்றியை ஏற்க முடியாது என கூறியிருக்கிறது காங்கிரஸ்.

அரியானாவில் 48 இடங்களில் வென்று அரியணையை தக்க வைத்துக் கொண்ட பாஜக, 39.94 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இதுவே 37 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி 39.09 % வாக்குகளை வாங்கியிருக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 0.85 சதவீதம் ஆகும் மாநிலத்தில் பாஜக எதிர்ப்பு அலையை வெற்றியாக்குவதில் கோட்டைவிட்ட காங்கிரஸ் வெறும் 0.85 சதவீத வாக்குகளில் தோல்வியை தழுவியிருக்கிறது.

இப்போதைய அரியானா தேர்தல் களம் அப்படியே கொஞ்சம் 2016 தமிழக சட்டபேரவை தேர்தல் களத்தை பிரதிபலிப்பது போல் உள்ளது. 2016-ல் ஜெயலலிதா தலைமையில் அதிமுக களம் கண்டது. பெரிய அளவில் கூட்டணியில் கட்சிகள் எதுவும் இல்லை. மறுபுறம் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியாக போட்டியிட்டன.

அப்போது அதிமுக கூட்டணிக்கு 40.77 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. அதே தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 39.76 சதவீதம். அதாவது 1.01 சதவீதம் வாக்குகளில் வெற்றியை திமுக பறிக்கொடுத்திருந்தது.

அரியானாவில் இப்போது கவனிக்கத்தக்க விஷயமாக காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி முறிவு பேசப்படுகிறது. மாநிலத்தில் வாக்குகள் பிரியக் கூடாது என்றே ராகுல் காந்தி ஆம் ஆத்மியை கூட்டணியில் இணைக்க ஆசைப்பட்டார். உள்ளூர் தலைவர்கள் விரும்பவில்லை என்றாலும், பேச்சுவார்த்தை நடந்தது. இருப்பினும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியாக களம் கண்ட காங்கிரசும், ஆம் ஆத்மியும் அரியானாவில் தனித்தனியாக களமிறங்கின.

ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் 7 தொகுதிகளை கொடுக்க வந்ததாக பேசப்பட்டது. ஆனால்.. 10 தொகுதிகளை கேட்டுவந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் கொடுக்கும் 7 தொகுதிகளும் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதியை காங்கிரஸ் தள்ளிவிடுவதாகவும் ஆம் ஆத்மி தரப்பில் குற்றச்சாட்டு பேச்சுக்கள் எழுந்தன. இப்போது மாநிலத்தில் 1.79 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது ஆம் ஆத்மி.. ஒருவேளை இந்தியா கூட்டணி வலுவாக இருந்திருந்தால் முடிவு மாறியிருக்குமோ என்ற கூட்டல் கழித்தல் பேச்சு அரசியல் வட்டாரத்திலும்.... அரசியல் பார்வையாளர்கள் வட்டாரத்திலும் இருந்து வருகிறது


Next Story

மேலும் செய்திகள்