``அமைச்சரின் மகள் இடத்தில் டன் கணக்கில் சந்தன கட்டைகள்..!'' பரபரப்பில் புதுவை
புதுச்சேரியில் வனத்துறை அமைச்சர் மகளுக்கு சொந்தமான இடத்திலிருந்து சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகி இருப்பதாகவும், உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மின் கட்டண உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை புதுச்சேரி அரசு திரும்பப்பெற வேண்டும் என்றார். விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய அவர், புதுச்சேரியில் வனத்துறை அமைச்சருடைய மகளுக்கு சொந்தமான இடத்தில் இருந்து சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6.2 டன் சந்தன கட்டைகளை தமிழக வனத்துறை பறிமுதல் செய்துள்ளதாகவும், எந்தவித அனுமதியும் இல்லாமல் இந்த தொழிற்சாலை இயங்கி வந்துள்ளதாகவும் கூறினார். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும் சந்தன கட்டைகள் விவகாரத்தில் தெளிவான அறிக்கையை புதுச்சேரி அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.