இந்திரா முதல் மோடி வரை... துணிச்சலின் அடையாளம்... மைலாப்பூர் டூ மார்க்ஸிஸம் - `யெச்சூரி' எனும் தோழர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் நலக்குறைவால் காலமானார். அவர் குறித்தான ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம் விரிவாக..
சுவாசக் கோளாறு பிரச்சினையால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த சீதாராம் யெச்சூரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்...
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்...
1974 -இல் இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய சீதாராம் யெச்சூரி, சென்னை மைலாப்பூரில் பிறந்தவர்...
1992 முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினராக இருந்து வந்த சீதாராம் யெச்சூரி, மேற்கு வங்கத்தில் இருந்து கடந்த 2005இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அப்பதவியில் 2017 வரை இருந்தார்..
மாநிலங்களவையில் பல்வேறு தலைப்புகளில் திறம்படவும், அறிவுப்பூர்வமாகவும் உரையாற்றி கவனம் பெற்ற சீதாராம் யெச்சூரி எழுத்தாளரும் கூட...
சீதாராம் சரி... யெச்சூரி என்பது உங்கள் சாதிப் பெயரா என ஒருமுறை கேள்வி எழுந்து சர்ச்சையான போது, ஆந்திராவின் கோதாவரி ஆற்றங்கரையில் யெச்சூரி என்ற கிராமம் ஒன்று இருந்ததாகவும், என் தந்தை வழி தாத்தாவின் கிராமமான அந்த கிராமம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறிய சீதாராம்.. அப்போது இரு குடும்பங்கள் மட்டுமே உயிர் பிழைத்ததாகவும், அதில் ஒரு குடும்பம் தங்களுடையது எனவும் கூறி இருந்தார்...
என்னுடைய முழுப் பெயர் யெச்சூரி வெங்கட சீத்தாராம ராவ் எனவும், "ராவ்" சாதிப்பெயர் என்பதால் அதனை நீக்கி விட்டேன் எனவும் விளக்கமளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார் அவர்..
சென்னையிலிருந்து குடும்பம் ஆந்திராவிற்கு இடம் பெயர்ந்து, ஹைதராபாத்தில் செட்டிலானாலும்... ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தின் போது சென்னைக்கு குடும்பத்துடன் வந்துவிடுவோம் என தெரிவித்திருந்தார் சீதாராம் யெச்சூரி...
இந்நிலையில், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சீதாராம் யெச்சூரி, தன் 72 வயதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்...
தொடர்ந்து, கற்பித்தல் மற்றும் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சீதாராம் யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கி இருக்கின்றனர்...
நம் நாட்டை பற்றிய ஆழமான புரிதலுடன், இந்தியாவுடைய சிந்தனைகளின் பாதுகாவலான சீதாராம் யெச்சூரியின் மறைவு பேரிழப்பு என ராகுல் காந்தி தொடங்கி பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்...