``கண்ணீரை வர வைக்கிறது..'' அன்புமணி வேதனை | Anbumani Ramadoss
சென்னையின் ஓராண்டு குடிநீர் தேவைக்கான தண்ணீர், வீணாக கடலில் கலப்பதாக வேதனை தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டப்படுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேட்டூர் அணையிலிருந்து 1.70 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்படும் நிலையில், நாள் ஒன்றுக்கு 15 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாக கலப்பதாக கூறிய அன்புமணி, இந்த அளவுக்கு தண்ணீரை வீணடிப்பது கண்ணீரை வரவழைப்பதாக குறிப்பிட்டார். சென்னையின் ஓராண்டு குடிநீர் தேவையான 15 டி.எம்.சி நீர் ஒரே நாளிலும், தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்திற்கான 2 டி.எம்.சி நீர், 3 மணி நேரத்திலும் கடலில் வீணடிக்கப்படுவதாக அவர் வேதனை தெரிவித்தார். இதேபோல், அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கான 1.5 டி.எம்.சி நீர், இரண்டே கால் மணி நேரத்தில் கடலில் வீணாவதாக சுட்டிக்காட்டினார். மேலும், 10 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வலியுறுத்தினால், அதற்கு மாறாக மணல் குவாரிகளை அரசு அமைத்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார். தமிழக அரசு எப்போது தடுப்பணைகளை கட்டப்போகிறது என அவர் கேள்வி எழுப்பினார்.