ஈபிஎஸ் அருகே இனி இல்லை... மாறிய இருக்கை உள்ளே வராத ஓபிஎஸ் - வரும் 19 என்ன நடக்கும்?
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டது. இதுவரை அந்த இருக்கையில் அமர்ந்திருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வதுக்கு இரண்டாவது வரிசையில் 207-ம் எண் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையான முன்வரிசை இருக்கையில் நேற்று முதல் அமர்ந்திருந்தார். இந்நிலையில், இருக்கை மாற்றம் செய்யப்பட்டபின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்லை. மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு வரும் 19ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்பாரா?அவருக்கு ஒதுக்கப்பட்ட இரண்டாவது வரிசை இருக்கையில் அமர்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.