லிஸ்ட் போட்டு சொன்ன நிர்மலா சீதாராமன்...புள்ளி விவரத்தோடு வந்த தங்கம் தென்னரசு
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டுக்கு, இதுவரை 18 ஆயிரத்து 564 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டு திட்டத்திற்கு மத்திய அரசு 21 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியை பெற்றுத் தந்தது என்றும், அதில் 5 ஆயிரத்து 880 கோடி ரூபாயை மட்டுமே தமிழக அரசு செலவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். உண்மையில் இதுவரை இத்திட்டத்திற்காக 18 ஆயிரத்து 564 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தங்கம் தென்னரசு தெளிவுபடுத்தினார். இதில் தமிழ்நாடு அரசு 11 ஆயிரத்து 762 கோடி ரூபாயும், வெளிநாட்டு நிதி நிறுவன கடன் மூலம் 6 ஆயிரத்து 802 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.
பொது முதலீட்டுக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட, மத்திய அரசின் பங்கான 7 ஆயிரத்து 425 கோடி ரூபாயில், ஒரு ரூபாய் கூட மத்திய அரசு இதுவரை அளிக்கவில்லை என்றார். மத்திய அரசு தனது பங்கினை அளித்து, இதை மத்திய அரசு திட்டமாக மாற்றி, செயல்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.